கல்லூரி வரலாறு

திரு கொளஞ்சியப்பர் அரசு கலைக் கல்லூரி என்ற பெயருடன் 1966 – ஆம் ஆண்டு முதல் புகுமுக வகுப்புக் கல்லூரி திருமுதுகுன்றத்தில் (விருத்தாசலம்) ஆண்கள் உயர்நிலைப்பள்ளிக் கட்டிடத்தில் ஆரம்பிக்கப்பட்டது.

கல்லூரியின் நிலையான கட்டிடம் இப்பொழுது அமைக்கப்பெற்றிருக்கும் இடமும், அதனைச் சூழ்ந்து பரவிக் கிடக்கும் 43.5 ஏக்கர் நிலமும் பழமலைநாதர் திருக்கோயிலால் கல்லூரிக்கு மிகக் குறைந்த விலையில் வழங்கப்பட்டவையாகும்.

1969 ஆம் ஆண்டு இக்கல்லூரியில் இளங்கலை வரலாறு, இளங்கலை தமிழிலக்கியம் ஆகிய இரண்டு பட்ட வகுப்புகள் அருள்மிகு கொளஞ்சியப்பர் திருக்கோயில் அன்புடன் நல்கிய 2 லட்சம் ரூபாய் நன்கொடையின் உறுதுணையால் ஆரம்பிக்கப்பட்டது.

உயர்நிலைப்பள்ளிக் கட்டிடத்தில் 1966 – ஆம் ஆண்டு இருபாலரும் பயில்வதற்காகத்துவங்கப்பெற்ற இக்கல்லூரி 1971 ஆம் ஆண்டு ஜூன் திங்களில் இப்போதிருக்கும் நிலையான கட்டிடத்திற்கு மாற்றப்பட்டது. இதே ஆண்டில் இளம் வணிகவியல் பட்டப்படிப்பும் தொடங்கப்பட்டது.

1972-73 ஆம் ஆண்டில் இளம் அறிவியல், கணிதப் பட்ட வகுப்பும் 79-80 ஆம் ஆண்டு விலங்கியல் வகுப்பும் ஆரம்பிக்கப்பெற்றன. 80-81ஆம் ஆண்டு இயற்பியல் பட்ட வகுப்பும் 1981 – ஆம் ஆண்டு முதுகலை தமிழ் வகுப்பும் தொடங்கப்பட்டது. 93-94 ஆம் ஆண்டு முதல் தமிழ்த்துறை முழு நேர எம்ஃபில் வகுப்பும் பகுதி நேர எம்ஃபில் மற்றும் பகுதி நேர முனைவர் ஆய்வு வகுப்புகளும் தொடங்கப்பட்டன. 97-98ஆம் ஆண்டில் கணினி அறிவியல் பட்ட வகுப்பு துவங்கப்பட்டது. 2000 – 2001 ஆம் ஆண்டு முழு நேரமுனைவர் ஆய்வும் ( தமிழ் ) துவங்கப்பட்டது.

பல்கலைக் கழகத் தர நிர்ணயக்குழு மார்ச் 2005ல் கல்லூரிக்கு வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டு B+ தரம் வழங்கியது. 2005 – 2006ஆம் கல்வியாண்டில் B.A., ஆங்கில இலக்கியம், B.Sc., வேதியியல், M.Sc., கணிதம், மற்றும் M.Com., ஆகிய வகுப்புகள் தொடங்கப்பட்டன.

2007-2008 ஆம் கல்வியாண்டு முதல், சுழற்சி முறை அறிமுகம் செய்யப்பட்டது. காலை சுழற்சி முறையில் அனைத்து பட்ட மற்றும் மேற்படிப்புகளும், மாலை சுழற்சி முறையில் B.A., தமிழ் இலக்கியம், B.A., ஆங்கில இலக்கியம், B.Sc., கணிதம், B. Sc., கணினி அறிவியல் மற்றும் B.Com., பட்ட வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

2012-2013 ஆம் கல்வியாண்டு முதல் B.Sc., தாவரவியல் பட்ட வகுப்பும் , M.A., ஆங்கிலம், M.A., வரலாறு, M.Sc., விலங்கியல், M.Sc., கணினி அறிவியல் பட்ட மேற்படிப்பு வகுப்புகளும் தொடங்கப்பட்டன.

2013-14 ஆம் கல்வியாண்டில் வரலாறு, கணிதம், விலங்கியல், வணிகவியல் துறைகளில் M.Phil., முதுநிலை ஆராய்ச்சி வகுப்பும், வணிகவியல் துறையில் Ph.D., ஆராய்ச்சி வகுப்பும் தொடங்கப்பட்டன. B. A., பொருளியல் (ஆ/த ) M.Sc., இயற்பியல் வகுப்புகளும் தொடங்கப்பட்டன.

இக்கல்லூரி அரசாணை ( நிலை ) எண் – 71 நாள் 23-05-2014 என்ற எண்ணுள்ள தமிழக அரசு ஆணையின்படி 23-05-2014 முதல், முதல் நிலை கல்லூரியாக (Grade – 1) தரம் உயர்த்தப்பட்டுள்ளது.

2015-16 ஆம் கல்வியாண்டில் இளநிலை B.B.A., முதுநிலை M.Sc., வேதியியல் M.Phil., கணினி அறிவியல், ஆங்கிலம், இயற்பியல் மற்றும் Ph.D., வேதியியல் ஆராய்ச்சி வகுப்புகளும் தொடங்கப்பட்டன.

பல்கலைக் கழகத் தர நிர்ணயக்குழு பிப்ரவரி 2016இல் கல்லூரிக்கு வருகை புரிந்து ஆய்வு மேற்கொண்டு B(2.88 Grade) தரம் வழங்கியது. 2016-17 ஆம் வருடம் இக்கல்லூரியின் 50வது பொன்விழா ஆண்டு.

2018-2019 ஆம் கல்வியாண்டு முதல் M.Sc., தாவரவியல் மற்றும் விலங்கியல் துறையில் Ph.D., பகுதி நேர ஆராய்ச்சி வகுப்பும் தொடங்கப்பட்டன.